இன்றைய காலகட்டத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று போல, அவ்வப்போது உலக மக்களின் உயிர்களைக் கொத்துக் கொத்தாக காவு வாங்கிய பெருந்தொற்று நோய்கள் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
கடந்த 1918ம் ஆண்டில் உலகையே புரட்டிப்போட்ட ஒரு தொற்று நோய்தான் ஸ்பானிஷ் ஃப்ளூ. அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் இந்தத் தொற்றினால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் ராணுவ வீரர்களே. அதன் பின்னர் மக்களுக்குப் பரவியதில் உலக மக்கள்தொகையில் 3ல் ஒரு பங்கினர் அல்லது 50 கோடி மக்கள் இந்த நோயினால் பாதிப்புக்கு உள்ளாகினர்.
நோய் முற்றியதில் சுமார் 5 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றினால் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை முதலாம் உலகப்போரில் இறந்த வீரர்களைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்ததாக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்று ஹெச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல். 2009ல் ஏற்பட்ட இதுவே 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட நோயின் முதல் உலகளாவிய தொற்று ஆகும்.
அமெரிக்காவே இந்த நோயின் தொடக்கப் புள்ளியாக இருந்தாலும் ஆப்பிரிக்காவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் 5 லட்சத்திற்கும், அதிகமான இறப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக ஆப்பிரிக்காவில் தோன்றிய எபோலா வைரஸ் தொற்று உலகை மிரள வைத்தது. கடந்த 2014ம் ஆண்டில் தனது கோர தாண்டவத்தைத் தொடங்கிய எபோலா வைரஸ் தொற்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
6 நாடுகளில் பரவிய இந்தத் தொற்று அடுத்தடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. இதைப்போலவே சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை நோய்களும் உலக மக்களை அச்சுறுத்தி விட்டுச் சென்றன.