2ஆம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதன் 75வது ஆண்டு வெற்றி தின விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்திய ராணுவத்தின் படைப் பிரிவும் பங்கேற்று மிடுக்கான அணிவகுப்பு நடத்தியது.
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஏப்ரல் 30ஆம் தேதி ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து மே 7 ஆம் தேதி ஜெர்மனியின் நாஜிப் படைகள் சரணடைந்தன.
மே 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அதே ஆண்டில் ஜூன் 24ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரெட் ஸ்கொயரில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 9ஆம் தேதி ரஷ்யாவில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே மே 8ஆம் தேதி வெற்றி தினம் ஐரோப்பிய நாள் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரஷ்யாவில் மே 9 ஆம் தேதி நடைபெற இருந்த 75வது ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம் ஜூன் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி மாஸ்கோவில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் இந்தியா, சீனா உள்பட 19 நாடுகளின் படைகளும் பங்கேற்று அணிவகுத்தன.
இந்தியாவின் முப்படையை சேர்ந்த வீரர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டு மிடுக்காக அணிவகுத்தனர்.
பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணிவகுப்பை பார்வையிட்டார். ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.