கொரோனா நோய்த் தொற்று காரணமாக, மக்கள் கூட்டம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் எளிய முறையில் காணொளி காட்சி மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் 31 - வது உலகளாவிய டெவெலப்பர்கள் மாநாடு - (WWDC 2020) ஜூன் 22 - ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. இந்த மாநாடு 26 - ம் தேதி முடிவடைகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது ஆப்பிள் நிறுவனம்!
இணையதளத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் டெவெலப்பர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஐஓஎஸ் 14, மேக் ஓஎஸ் 11 பிக் சர், டிவி ஓஎஸ் 14, வாட்ச் ஓஎஸ் 7 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் எந்தவித புது வெளியீடுகளையும் இதுவரை அறிவிக்கவில்லை இந்தக் கூட்டத்தின் முக்கிய அறிவிப்பாக, இனி ஆப்பிள் மேக் கணினிகளில் இன்டெல் நிறுவனத்தின் பிராசசர்களுக்குப் பதில் சொந்த ARM பிராசஸர்கள் பயன்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது ஆப்பிள். 2022 - ம் ஆண்டிலிருந்து ஆப்பிள் நிறுவன பிராசர்களுடன் கருவிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எம் நிறுவனம் தயாரிக்கும் பவர்பிசி பிராசசருக்கு மாற்றாக இன்டெல் நிறுவனத்தின் X86 பிராஸசரைப் பயன்படுத்தி வருகிறது ஆப்பிள். தற்போது இண்டெல்க்கு பதில் சொந்த ARM பிராசசரைப் பயன்படுத்த எடுத்திருக்கும் முடிவு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் சிறப்புரை வழங்கினார். இந்த உரையின் பொது உலகளாவிய இனவாதத்துக்கு எதிராகவும், கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
WWDC 2020 நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புகள் குறித்து அறிந்துகொள்வோம்...
IOS - 14
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 14 இயங்குதளம் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய இயங்குதளத்தில் 'சிறீ' புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்புப் பக்கத்தில் ஐஓஎஸ் டைல்ஸ்கள் பெரிதாகக் காணப்படுகின்றன. மீமொஜிகளில் புதிதாகா 20 ஸ்டைல்கள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய இயங்குதளத்தில் ஆப் லைப்ரரி, விட்ஜெட், ஸ்மார்ட் ஸ்டாக், படத்துக்குள் படம் என்று பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள் .
மறு வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறீ செயலி
பயனர்களுடன் உறவாடும் வகையில் சிறி செயலியை ஆப்பிள் மிகப்பெரிய அளவில் மறுவடிவமைப்பு செய்திருக்கிறது. இந்த அப்டேட் மூலம் சிறீ, விண்டோஸ் இயங்குதளத்தில் கூட எழுத்துக்களை மறைக்காமல் பாப் - அப் ஆக செயல்படும் என்று கூறியிருக்கிறார்கள். புதிதாக 11 மொழிகளைப் புரிந்துகொள்ளும் விதத்திலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது சிறீ. மேலும் புதிய மொழிகள் சேர்க்கப்படவிருப்பதாகவும் ஆப்பிள் கூறியிருக்கிறது. தற்போது ஆப் லைனிலும் மொழிமாற்றம் செய்யும் விதத்திலும் தனியுரிமையைப் பாதுகாக்கும் விதத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது சிறீ.
மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் மேப்
பயனர்களுக்கு மேம்பட்ட முறையில் அனுபவத்தை வழங்கும் முறையில் ஆப்பிள் மேப் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இங்கிலாந்து, கனடா, அயர்லாந்து ஆகிய பகுதிகளில் கிடைக்கும் விதத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது ஆப்பிள் மேப். விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட இருக்கிறது. சைக்கிள் பாதை, மின் சாதன பாதை, பசுமைப் பகுதிகள் இணைப்பு என்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
கார்பிளே (Carplay) மென்பொருள்
ஆப்பிள் நிறுவனம் தனது கார்பிளே மென்பொருளில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய வால்பேப்பரை மாற்றும் வசதி, மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் சாதனத்தின் சார்ஜிங், டிஜிட்டல் சாவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி, மேம்படுத்தியிருக்கிறது. டிஜிட்டல் சாவி மூலம் கார் சாவி இல்லாமலே இந்த மென்பொருள் மூலம் காரை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபேட் ஓஎஸ் 14
மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் கால் ஸ்கிரீன், தேடு பொறி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் ஐபேட் ஓஎஸ் 14 வெளியாகியிருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் பென்சில்
ஐபேட் ஓஎஸ் 14 அப்டேட்டுடன் கையெழுத்து, செலக்ட் செய்தல், அழித்தல், சேர்த்தல், படம் வரைவதற்கு ஏற்ப ஆப்பிள் பென்சில் பயன்பாட்டையும் மேம்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
வாட்ச் ஓஎஸ் 7
உடல் நலன் மீது கவனம் செலுத்தும் வகையில் ஆப்பிள் வாட்ச்சின் புதிய ஓஎஸ் 7 மேம்படுத்தப்பட்டுள்ளது. சைக்லிங் செல்லும் முறையில் ஓஎஸ் 7 - ல் உள்ள புதிய மேப் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், புதிதாக கை நகர்வு, கால் நகர்வு ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வகையில் டான்ஸ் மோடும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேக் ஓஎஸ் பிக் சர்
ஐஓஎஸ் 14, டிவி ஓஎஸ் 14, வாட்ச் ஓஎஸ் 7 ஆகியவற்றைப் போன்றே ஆப்பிள் நிறுவனத்தின் கணினியின் இயங்குதளமான 'மேக் ஓஎஸ் 11 பிக் சர்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பில் வெளியாகியிருக்கிறது புதிய இயங்குதளம். நோட்டிபிகேஷன் சென்டர், மெனு பார் வசதிகளை மாற்றுதல், ஆப் டாக், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
பிராசஸர் மாற்றம்
தற்போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐ பெட், ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றுக்கு இன்டெல் நிறுவனத்தின் பிராசசர்களையே சார்ந்திருக்கிறது. இனி சொந்த பிராசஸரை பயன்படுத்தும் முறைக்கு மாறவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சாப்ட்வேர், ஹார்ட்வேர் ஆகிய இரண்டிலும் கோலோச்ச எடுத்திருக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. குறைவான ஆற்றலைப் பயன்படுத்தி அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய பிராசஸரை வடிவமைக்கவிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2020 மாநாடு முடிவடைவதற்குள் மேலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...