ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் டெக்சாமெத்தசோன் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் தயாரிக்குமாறு சர்வதேச நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
தீவிர கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் இந்த மருந்து நல்ல பலன் அளித்துள்ளதாகவும், சுவாசக் கருவி இருந்தால் மட்டுமே சுவாசிக்க முடியும் என்ற நிலையில் இருந்தவர்களிடையே 35 சதவீத மரணத்தை இந்த மருந்து குறைத்துள்ளதாகவும் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த மருந்துக்கு உலக அளவில் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து பலனளிக்கும் என்றும், தொடக்க நிலையில் உள்ளவர்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.