கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டெக்ஸாமெத்தஸோன் என்ற மருந்து உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய இடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இதுவரை குறிப்பிடத்தக்க தடுப்பூசிகள் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் விலை மலிவான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் டெக்ஸாமெத்தஸோன் கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற முதல் மருந்தாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்திய இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே விடுத்துள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு டெக்ஸாமெத்தஸோன் வழங்கப்பட்டால், அது நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
63 டாலர்களுக்கும் குறைவான செலவில் 8 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் லாண்ட்ரே குறிப்பிட்டுள்ளார். மேலும் இது ஒரு திருப்புமுனை எனக்குறிப்பிட்டுள்ள அவர், உலகம் முழுவதும் இதனைப் பயன்படுத்தி ஏராளமான உயிர்களைக் காப்பாற்றலாம் என்றும் தெரிவித்துள்ளார்.