கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணம், உலகம் முழுவதும் இனபாகுபாடு மற்றும் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களை பற்ற வைத்துள்ள நிலையில், இனபாகுபாடு அடிப்படையிலான மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவசர விவாதம் நடத்த ஐ.நா. முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் மின்னியாபொலீஸ் நகரில் போலீஸ் அதிகாரி முட்டியால் கழுத்தில் மிதித்ததில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணமடைந்ததற்கு நீதி கோரி வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் தொடர்கிறது.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. ரிச்மண்டில் காலனித்துவத்துக்கு எதிராகவும் இனபாகுபாடுக்கு எதிராகவும் நடந்த போராட்டத்தில் வன்முறை மூண்டத்தில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளையும் பட்டாசுகளை போலீசார் வீசி எறிந்தனர்.
மெக்சிகோவின் அல்புகெர்க்கி நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குள் புகுந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் காலனித்துவ ஆளுநரான ஜுவான் டி ஓசேட் சிலையை அகற்ற வலியுறுத்தி இனபாகுபாடு எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை, போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார். இதில் சிலர் காயமடைந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் பாராளுமன்ற நுழைவாயிலில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. மேலும் காலனித்துவத்தை பின்பற்றியதாக போர் வீராங்கனை லூயிஸ் போத்தாவின் சிலையை அகற்ற ஆர்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே இனரீதியான அடிப்படையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அவசர விவாதம் நடத்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஆப்பிரிக்கக் குழு சார்பாக புர்கினா பாசோ விடுத்த வேண்டுகோளை ஏற்று, இனவெறி தாக்குதல்கள், போலீஸ் அத்துமீறல்கள் மீது இந்த விவாதம் கவனம் செலுத்தும் என்று ஐ.நா. உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.