இங்கிலாந்து அரச குடும்பத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழா, மகாராணியின் பிறந்தநாள் விழா. ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் சூழ ஆடம்பரமான முறையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பில் நடைபெறும் பிறந்த நாள் விழா, இந்த வருடத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் எளிமையான முறையில் சம்பிரதாயத்துக்காக இன்று நடந்து முடிந்திருக்கிறது.
இதற்கு முன்பு 1955 - ல் நடந்த ரயில்வே போராட்டத்தின் போதுதான் இப்படி எளிமையாகக் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இன்றைய பிறந்த நாள் விழாவில் துருப்புகளின் வண்ண அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஒரு சில சிப்பாய்கள் மட்டும் சம்பிரதாயத்துக்கு இசை இசைத்து ராணிக்கு மரியாதை செலுத்தினர். அவர்களின் மரியாதையை எலிசபெத் மகாராணி ஏற்றுக்கொண்டார். இத்துடன் பிறந்த நாள் விழா முடிந்துவிட்டது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 94 - வது பிறந்த நாளை ஏப்ரல் 21- ம் தேடிக் கொண்டாடினார். ஆனால், ராஜாங்க ரீதியில் அவரது பிறந்த நாள் எப்போது ஜூன் மாதத்தில் தான் 'வண்ண அணிவகுப்புடன்' கொண்டாடப்படும். இங்கிலாந்து ராணுவப் பிரிவுகளின் கொடிகளைக் குறிப்பதைப் போன்று இந்த வண்ண அணிவகுப்புகள் அரங்கேறும். பொதுவாக பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான வீரர்களும் புரவி வீரர்களும் அணிவகுத்து அரச குடும்பத்துக்கு மரியாதை செய்வார்கள். அப்போது விமானங்கள் அரண்மனைக்கு மேலே பறந்து மரியாதை செலுத்தும்.
இவை எதுவுமே இந்த வருடத்தில் நடைபெறாமல் எளிமையான முறையில் ராணியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது!