இஸ்ரேல் நாட்டின் 'பார் இலன் யுனிவர்சிட்டி' ஆராய்ச்சியாளர்கள், உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனோ வைரஸின் மூலக்கூறுகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த மைல்கல் கண்டுபிடிப்பு மூலம் வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்தை விரைவில் கண்டுபிடிக்கலாம் என்று நம்பிக்கை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரிலிருந்து பரவி உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, கொரோனா வைரஸ். இதுவரை உலகில் 7.27 மில்லியனுக்கும் அதிகமான மக்களைத் தொற்றியுள்ள வைரஸால் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். இந்தக் கொடிய வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய இஸ்ரேலில் உள்ள ‘பார் இலன் யுனிவர்சிட்டி’ (பிஐயூ) ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸின் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். MDPI Vaccines அறிவியல் இதழில் தமது ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸின் ஆண்டிஜன், புரதத் துகள், ஆற்றல் மிகுந்த இரண்டு எபிடோப்ஸ் ஆகியவற்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவற்றின் செயல்பாடு மூலம் விரைவில் எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.