கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்தால் அமெரிக்கா முழுவதும் இனபாகுபாடு எதிரான போராட்டங்கள் வெடித்து, 16ஆவது நாளாக தொடரும் நிலையில், ஆங்காங்கே தலைவர்கள் சிலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் போலீஸ் அதிகாரி கால் முட்டியால் கழுத்தில் மிதித்ததில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் உயிரிழந்ததையடுத்து, இன மற்றும் நிறவெறிக்குக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், இங்கிலாந்தின் பிரிஸ்டலில் நகரில் இனபாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துறைமுகம் அருகே ஆற்றில் வீசப்பட்ட எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலை மீட்கப்பட்டது. ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கேட்டு நடந்த போராட்டத்தில், அடிமை வர்த்தகர் என்று அழைக்கப்பட்ட எட்வர்ட் கோல்ஸ்டன் சிலையை பெயர்த்து, இழுத்துச் சென்று போராட்டக்காரர்கள் துறைமுக ஆற்றில் வீசினர்.
தற்போது மீட்கப்பட்ட அந்த சிலை, பிளாக் லைவ்ஸ் மேட்டர் பலகைகளுடன் காட்சிப்படுத்தப்படும் என்று பிரிஸ்டல் மேயர் மார்வின் ரீஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநில தலைநகர் ரிச்மண்டில் இனபாகுபாடுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் அதிபர் ஜெபர்சன் டேவிஸின் சிலை கோடாரியால் தகர்க்கப்பட்டது. தலைவர்களின் மற்ற சிலைகள் மீது போராட்டக்காரர்கள் வெள்ளை பூச்சுகளை தெளித்தனர்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் இருந்து லிங்கன் நினைவுச் சின்னத்துக்கு நூற்றுக்கணக்கானவர்கள் பேரணியாக சென்று இனபாகுபாடுக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஆஸ்திரேலியா அரசு, பழங்குடியின மக்களை தவறான நடத்துவதாக குற்றஞ்சாட்டியும் இனபாகுபாடுக்கு எதிராகவும் சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரில் ஒருவர், மெல்போர்ன் போராட்டத்தில் பங்கேற்றவர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.