அமெரிக்காவில் மின்னசொட்டா மாகாணத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞன் கழுத்தில் காவலர் ஒருவர் தனது கால்முட்டியால் அழுத்தியதில் ஃப்ளாயிட் உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் நிறவெறியுடன் நடந்து கொண்டதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. நியுயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் அவென்யூ பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சாலைகளில் முழங்காலிட்டு நிறவெறிக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பின்னர் அதே நகரின் மற்றொரு பகுதியில் அவர்கள் நீண்ட பேரணியாகச் சென்றனர்.
இதனிடையே வாஷிங்டனில் வெள்ளை மாளிகையைச் சுற்றி அவ்வப்போது போராட்டம் நடந்து வந்ததால் அங்கு இரும்பினாலான தற்காலிகத் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. போராட்டதின் வீரியம் சற்று குறைந்ததையடுத்து அந்தச் சுவர் பகுதியளவு அகற்றப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில், அமைதியான முறையில் பேரணிகள் நடந்த போதும், சியாட்டில் நகரில் போலிசாரை பொதுமக்கள் குடைகளால் தாக்கியதை தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொதுமக்களைக் கலைத்தனர்.
விர்ஜினியாவில் அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியரான கிறிஸ்டோபர் கொலம்பசின் சிலையை அடித்து உடைத்த போராட்டக்காரர்கள் அதனை கயிற்றைக் கட்டி சாலையில் இழுத்து வந்தனர். பின்னர் சிலையை தீ வைத்து எரித்தனர்.