கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட உடன் அது குறித்த தகவல்களை, எந்த கால தாமதமும் இன்றி, உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்ததாக சீனா விளக்கம் அளித்துள்ளது.
வைரஸ் தொற்று குறித்த ஆரம்ப கட்ட தகவல்களை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசு தகவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா வைரசின் மரபணு வரிசைகள், முதற்கட்ட தொற்று விவரங்கள் அவ்வப்போது உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தொற்றிற்கு காரணம் கொரோனா வைரஸ் என்பதை சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி உறுதி செய்ததாகவும், அதைத் தொடர்ந்து, ஜனவரி 11 ஆம் தேதி முதல், கொரோனா தகவல்கள் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.