கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது பற்றி சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் இன்று பேச்சு நடத்துகின்றன.
கொரோனா பரவலால் உலக நாடுகளில் தொழிற்சாலைகள் மூடல், போக்குவரத்து முடக்கம் ஆகியவற்றால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்தே கச்சா எண்ணெயின் விலையும் கடுமையாகச் சரிந்தது.
விலையை நிலைப்படுத்த உற்பத்தியை ஒரு நாளைக்கு 97 லட்சம் பீப்பாய்கள் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையைப் பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனிடையே வெள்ளியன்று, கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 42 டாலராக உயர்ந்தது. இந்நிலையில் ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு நாளைக்கு 77 லட்சம் பீப்பாய் அளவுக்குக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டு, அது குறித்து சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இன்று பேச்சு நடத்துகின்றன.