கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் வூகான் நகரில் கடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்து , வீடு திரும்பினார். இந்த நகரில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. இதனால், கொரோனாவின் பிடியிலிருந்து முற்றிலும் மீண்டுள்ளது வூகான்.
மத்திய சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தின் தலைநகரான வூகானில் சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, வூகான் வைராலஜி ஆய்வு மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா தொடர்ந்து, குற்றம் சாட்டி வருகிறது.
சீனாவிலேயே இந்த மாகாணத்தில்தான் அதிகளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இங்கு மொத்தம் 68,135 மக்களுக்கு கொரோனா தொற்று பாதித்தது. இதில், 63,623 மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு விட, 4,512 பேர் பலியாகினர். சிகிச்சையிலிருந்த கடைசி மூன்று நோயாளிகளும் முற்றிலும் குணமடைந்ததால், அவர்களும் நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதனால், வூகான் கொரோனா இல்லாத நகரமாக மாறியுள்ளது.
கடந்த மே 14- ந் தேதி முதல் ஜூன் 1- ந் தேதி வரை வூகானில் 99 லட்சம் மக்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், அறிகுறி தெரியாத கொரோனா தொற்றுக்குள்ளான 245 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்களை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆனால், தனிமைப்படுத்ப்பட்ட இவர்களுக்கு இருமல், காய்ச்சல், தொண்டை வலி எதுவும் இதுவரை ஏற்படவில்லை.எனினும், இவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட வாய்ப்பு இருப்பதால் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீன தேசிய சுகாதார ஆணையம் இந்த தகவலை தெரிவித்ததாக 'பீப்பிள்ஸ் டெய்லி ' செய்தி வெளியிட்டுள்ளது.