ரஷ்யாவில் ஆர்டிக் பகுதியில் Krasnoyarsk மாகாணத்தில் நோரில்ஸ்க் என்ற தொழிற்சாலைகள் மிகுந்த நகரம் உள்ளது. உலகிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் நோரில்ஸ்க் நகரும் ஒன்று .தலைநகர் மாஸ்கோவிலிருந்து 3,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரத்தில் கடந்த 29- ந் தேதி Norilsk Nickel குழுமத்துக்கு சொந்தமான தொழிற்சாலையில் எண்ணெய் கிடங்கு அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது. இதனால், கிடங்கில் இருந்த 20,000 டன் ஆயில் வெளியேறி 12 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. ஆர்டிக் கடலை நோக்கி ஓடும் அம்பர்னாயா நதியிலும் ஆயில் கலந்தது.
இதனால், நதி நீர் முற்றிலும் நிறம் மாறி சிவப்பு வர்ணத்துக்கு மாறியுள்ளது. நதியில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்தும் வருகின்றன. எண்ணெய் கிடங்கு வெடித்து இரு நாள்களுக்கு பிறகுதான், நதியில் எண்ணெய் கலப்பது குறித்து ரஷ்ய அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. அதுவும், சோசியல் மீடியாவில் பரவிய புகைப்படத்தை பார்த்த பிறகே, அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். நதியை ஆய்வு செய்த ரஷ்ய மீன் வளத்துறை அதிகாரிகள் நதியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற 10 ஆண்டு காலம் பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் வீடியோ கான்பரன்ஸிங் வழியாக கூட்டம் நடத்தினார். அப்போது, 'நதியில் ஆயில் கலக்கும் விஷயம் இரு நாள்களுக்கு பிறகுதான் உங்களுக்கு தெரிந்துள்ளது, அப்படியென்றால் நீங்கள் வேலை பார்க்கும் லட்சணம் இதுதானா' என்று கொந்தளித்தார். தற்போது, அம்பர்னாயா நதி ஓடும் Krasnoyarsk மாகாணத்துக்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
Norilsk Nickel குழுமத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். அம்பர்னாயா நதியை சுத்தப்படுத்துவது கடினம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். ரஷ்யாவில் சுற்றுச்சூழலுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாவது மிகப் பெரிய சம்பவமாக இது கருதப்படுகிறது.