கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரியும் இனபாகுபாட்டுக்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் வெடித்துள்ள போராட்டங்கள் 8வது நாளாக தொடர்கிறது.
நூதன ஆர்ப்பாட்டங்கள், பேரணி என பகலில் பெரும்பாலும் அமைதியான முறையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினாலும், இரவில் கட்டுக்கடங்கா கூட்டம், கலவரம், வன்முறை, தீவைப்பு, கடைகள் சூறை என போராட்டங்கள் வேறு நிலைக்கு திசை திரும்பி உள்ளது.
ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டின் இனபாகுபாடு படுகொலையை கண்டித்து வாஷிங்டனின் லிங்கன் மெமோரியல் முன்பு அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம், பின்னர் வெள்ளை மாளிகைக்கு அருகே லாஃபாயெட் பூங்கா முன்பு கலவரமாக மாறியது.
போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களை போராட்டக்காரர்கள் வீசி எறிந்தனர். அதனை தடுப்புகள் வைத்து தடுத்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
ஓரிகான் மாநிலத்தின் போர்ட்லேண்ட் மற்றும் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைகளை முதுகுக்கு பின்னால் வைத்து 9 நிமிடம் சாலையில் படுத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் என்னால் மூச்சுவிட முடியவில்லை என்ற ஜார்ஜ் பிளாய்ட்டின் கடைசி வார்த்தைகளை திரும்பத் திரும்ப கூறி நகர் முழுவதும் எதிரொலிக்கச் செய்தனர்.
நியூயார்க் நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி மன்ஹாட்டன் பாலத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொலேராடோ மாநிலத்தின் டென்வர் நகரத்தில் இனபாகுபாடுக்கு எதிராக நடந்த பேரணியில், போலீஸ் அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களுடன் கைக்கோர்த்து சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
கருப்பின இளைஞன் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கோரி லாஸ் ஏஞ்சல் நகரின் புகழ்பெற்ற ஹாலிவுட் பவுல்வர்டில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.