அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம் காரணமாக 40 நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்று மாகாண ஆளுநர்களை அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னபொலிஸ் என்ற இடத்தில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞரை போலீசார் கழுத்தில் மிதித்துக் கொன்றனர். இதையடுத்து அமெரிக்காவில் மீண்டும் இனவாதம் தலைதூக்குவதாகக் கூறியும், ஃப்ளாயிட் மரணத்திற்கு நீதி கேட்டும் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் வாகனங்கள், கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
போராட்டங்கள் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கையும் மீறிய மக்கள் வீதிகளில் வன்முறையில் ஈடுபட்டதால் பல்வேறு இடங்களில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அப்பகுதியிலும் தீ வைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதால் மாளிகையின் விளக்குகள் அணைக்கப்பட்டு, கதவுகள் இழுத்து மூடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாளிகையில் இருந்த அதிபர் டிரம்ப், பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பாதிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களுடன், அதிபர் டிரம்ப் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பேசும்போது,போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார். தேவைப்பட்டால் ராணுவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்த டிரம்ப், போராட்டம் நடத்துபவர்களிடம் ஒருபோதும் மண்டியிட முடியாது என்றும் கூறினார்.