வெள்ளை மாளிகை அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றதையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைப் சிறிது நேரம் அதிகாரிகள் பாதுகாப்பாகப் பாதாள அறையில் வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் உயிரிழந்தார்.
இதைக் கண்டித்து வெள்ளி இரவு வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நடைபெற்ற போது பாதுகாப்புக் கருதி அதிபர் டொனால்டு டிரம்ப், அவர் மனைவி மெலனியா, மெலனியாவின் மகன் பேரன் ஆகியோரை அதிபருக்கான பிரத்யேக பாதுகாவலர்கள் பாதாள அறைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.
போராட்டம் ஓய்ந்தபின் ஒருமணி நேரத்துக்குப் பிறகே அனைவரும் மேலே வந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் ஆகிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.