ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் ஒன்று எரிபொருள் நிரப்பி சோதனை செய்யப்பட்ட போது வெடித்துச் சிதறியது.
அந்த நிறுவனத்தின் புரோட்டோ வகையைச் சேர்ந்த 4வது விண்கலம் துருப்பிடிக்காத எஃகினால் செய்யப்பட்டிருந்தது. எஸ்என் 4 என்று பெயரிடப்பட்ட அந்த விண்கலம் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.
அந்த விண்கலத்தில் உள்ள உந்து சக்தி இயந்திரம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக விண்கலத்தில் திரவ நைட்ரஜன் நிரப்பப்பட்டிருந்தது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் உள்ள போக்கா சிக்கா என்ற இடத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக விண்கலம் வெடித்துச் சிதறியது.
இந்தச் சூழ்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா வீரர்களை அழைத்துச் செல்லும் ஃபால்கன் ராக்கெட் கடந்த வியாழன் அதிகாலை ஏவுவது தள்ளிப்போனது. இந்நிலையில் இன்று அந்த விண்கலம் ஏவப்படுவதாக இருந்த சூழலில் வானிலை சாதகமாக இருந்தால் பிற்பகலில் ஃபால்கன் 9 ஏவப்பட வாய்ப்பு இருப்பதாக, நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.