அமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பல நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் பெருகி வருகின்றன. போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் வெள்ளை மாளிகை பல மணி நேரம் மூடப்பட்டது.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபோலிஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாயிட் என்பவரை சில போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் கருப்பினர்த்தவர்கள் போலீஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறியுடன் நடந்து கொள்வதாகக் கூறி மின்னபோலிஸ் பகுதியில் கடந்த இரு நாட்களாக வன்முறை வெடித்துள்ளது. அங்கிருந்த காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாயின.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிபரின் கருத்துக்கு ட்விட்டர் நிர்வாகமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. லூயிஸ்வில்லே என்ற இடத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்கனவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கருப்பின பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
ஜார்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட சம்பவம் மினசோட்டா மட்டுமின்றி சிகாகோ, இல்லினாய்ஸ், கலிபோர்னியா, டெனிசி ஆகிய மாகாணங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி, வெள்ளை மாளிகையின் கதவுகள் மூடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், லூயிஸ்வில்லே என்ற இடத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கருப்பின பெண் மரணத்திற்கு நீதிகேட்டு அப்பகுதியில் ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பேரணி நடத்தினர்.