கொரோனா தொற்றாளர்கள் பேசும் போது வெளியாகும் வைரஸ் 8 முதல் 14 நிமிடங்கள் வரை காற்றில் உயிருடன் இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் தேசிய அறிவியல் அகாடமியின் இதழில் வெளியாகி உள்ளது.
தொற்றாளரிடம் இருந்து வெளியாகும் தும்மல் மற்றும் இருமல் வழியாக தொற்று பரவும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும், எந்த அறிகுறியும் இல்லாமல் வைரசை சுமந்து செல்பவர்களிடம் இருந்தும் தொற்று பரவும் என்பது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சத்தமாக பேசுபவர்களின் வாயில் இருந்து வெளியாகும் வைரஸ் கலந்த திரவ துளிகளில், தொற்றை பரப்பும் கிருமிகள் ஆயிரக்கணக்கில் இருப்பதையும் லேசர் ஒளிச் சிதறல் வாயிலாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்து மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களில் இந்த வகையில் தொற்று பரவும் ஆபத்து அதிகம் எனவும் கூறப்படுகிறது.