சீனாவின் அடனோவைரஸ் கோவிட்-19 தடுப்பூசி, பாதுகாப்பானது என்பதோடு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடியது என மனிதர்கள் மீதான முதல் கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முதல் கட்ட பரிசோதனை, சீனாவின் வூகான் நகரில், 18 வயது முதல் 60 வயது வரை உள்ள 108 பேரிடம் 3 குழுக்களாக மேற்கொள்ளப்பட்டது.
முதல்கட்ட பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு உடல்வலி, காய்ச்சல், தலைவலி, மயக்கம் இருந்ததாகவும், இத்தகைய பக்க விளைவுகள் 48 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட பிறகு 28 நாட்கள் வரை தீவிரமான, எதிர்மறையான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
250 பேரை வைத்து நடத்தப்படும் இரண்டாம் கட்ட பரிசோதனையிலும் இதே முடிவுகள் கிடைக்கிறதா என்றும், 6 மாதங்கள் வரை எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படாமல் உள்ளதா என்றும் கண்டறியப்பட உள்ளது.