30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் விழித்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால்,அதில் இருந்து அமெரிக்கா நிரந்தரமாக விலகி விடும் என்ற அதிபர் டரம்பின் மிரட்டலை இதர உறுப்பு நாடுகள் நிராகரித்துள்ளன.
கொரோனா பரவல் துவங்கியதை மறைத்து சீனாவுக்கு சாதமாக இருப்பதாகவும், கொரானோ தடுப்பு நடவடிக்கைகளில் பலவீனமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி, உலக சுகாதார நிறுவனத்திற்கான அமெரிக்க நிதியை சென்ற மாதம் நிறுத்தி வைத்தபின், இந்த மிரட்டலை அவர் விடுத்தார். இந்த நிலையில் ஜெனீவாவில் நடந்த வருடாந்திர கூட்டத்தில், கொரோனாவை உலக சுகாதார நிறுவனம் கையாண்ட விதம் குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான ஆய்வை நடத்த உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன. டிரம்பின் மிரட்டலை பொருட்படுத்த தேவையில்லை என ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துவிட்டதால், டிரம்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.