உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்து அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், 3 லட்சத்து 20 ஆயிரத்தும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூர வைரஸ் பலிவாங்கியுள்ளது.
சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கெதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனாலும் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்திய பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் பாதிப்புகளால் பெரும்பாலான நாடுகளும் கலக்கமடைந்துள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை 49 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொடுந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 26 லட்சத்து 71 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் 44 ஆயிரம் பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நோய்த்தொற்றிலிருந்து 19 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பூரண குணமடைந்திருப்பது, சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் மட்டுமே இதுவரை 15 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 92 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கடுத்தபடியாக ரஷ்யாவில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 800க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டுமே அங்கு 9,200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 115க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதே போல் ஸ்பெயின், பிரேசில், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் பாதிப்புகளின் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதனிடையே மெக்சிகோ நாட்டில் இன்று ஒரே நாளில் 155க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், அந்நாட்டின் பலி எண்ணிக்கை 5,300க்கும் மேல் அதிகரித்துள்ளது.