உலகம் முழுவதும் கொரோனாவைப் பரப்பிய சீனாவை தண்டிப்பதற்கு அதிபர் டிரம்ப் நீண்டகால திட்டங்களை வகுத்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா-சீனா இடையிலான ராஜாங்க உறவு ஏற்கனவே வர்த்தக இழுபறியால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா விவகாரத்தால் மேலும் சிதிலமடைந்துள்ளது. தேர்தல் கால அதிரடிகளைக் கடந்து டிரம்ப் நிர்வாகம், சீனாமீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களின் உயிர்களை பறித்துள்ள கொரோனா, சீனாவில் இருந்துதான் தோன்றியது என்றும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்படும் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். சீனாவுக்கு பொருளாதாரத் தடைவிதித்தல், புதிய வர்த்தக கொள்கைகளை உருவாக்குதல் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.