உலகில் கொரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மனித குலத்துக்கு கண்ணுக்கு தெரியாத புதிய எதிரியாக உருவெடுத்து பேரிழப்பை கொரோனா நோய் ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி, மாலை நான்கரை மணிக்கு கொரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 42 ஆயிரத்து 500ஐயும், ஸ்பெயினில் 21 ஆயிரத்தையும், இத்தாலியில் 24 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தையும், பிரிட்டனில் 16 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
இதேபோல் உலகில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் உலக அளவில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 7 லட்சத்து 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரும், இத்தாலியில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், பிரான்சில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரும், பிரிட்டனில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா நோயிலிருந்து 6 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 16 லட்சத்து 70 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் நிலையில், 57 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.