அமெரிக்காவில் பூஜ்யம் டாலருக்கும் கீழ்சரிந்த கச்சா எண்ணெய் விலை பின்னர் மீட்சியடைந்து 20 டாலராக உள்ளது. கொரோனா பாதிப்பால் உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை பெருமளவு குறைந்துள்ளது.
இந்நிலையில் சேமிப்புக் கிடங்குகள் முழுவதும் நிரம்பியதால் கச்சா எண்ணெய்த் தேவையும் குறைந்து அதன் விலை கடுமையாகச் சரிந்தது. இதனால் திங்களன்று அமெரிக்க எண்ணெய்ச் சந்தையில் மே மாதம் வழங்க வேண்டிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் பூஜ்யம் டாலருக்கும் கீழே சென்று மைனஸ் 37 டாலர் 63 சென்ட்களாக இருந்தது.
இது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சியாகும். திங்களன்று வணிக நேர முடிவில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் பத்து சென்ட்களாக இருந்தது. செவ்வாயன்று தொடக்கத்தில் ஏற்கெனவே அடைந்த சரிவில் இருந்து மீண்டு ஒரு பீப்பாய் 20 டாலர் 43 சென்ட்களாக இருந்தது. ஜூன் மாதம் வழங்க வேண்டிய எண்ணெய் ஒரு பீப்பாய் 25 டாலர் 61 சென்ட்களாக இருந்தது.