சீனாவில் கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்பு நாலாயிரத்து 636 ஆக உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் 82 ஆயிரத்து 367 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூவாயிரத்து 342 பேர் உயிரிழந்ததாகவும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. 77 ஆயிரத்து 944 பேர் முழுமையாகக் குணமடைந்ததாகவும், ஆயிரத்து 81 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊகானில் ஏற்கெனவே கணக்கில் வராத ஆயிரத்து 290 உயிரிழப்புகளையும் சேர்த்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து 636 ஆக உயர்ந்துள்ளதாகச் சீன அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. மருத்துவரின் பார்வைக்கு வராமல் வீட்டிலேயே நோயாளிகள் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்புகள் முதலில் கணக்கில் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.