உலகம் முழுவதும் பேராபத்தாய் பரவிக் கிடக்கும் கொரோனா வைரசின் தாக்குதலால் அமெரிக்காவில் ஒரேநாளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளில் மனித குலத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. பார் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதினெட்டரை லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தொற்றுநோயின் மையப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நேற்று மட்டும் 27 ஆயிரத்து 367 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்தது. இதேபோல் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 524 பேர் மரணித்து விட பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 101 ஆக உள்ளது. இவர்களுடன் 11 ஆயிரத்து 766 பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலைமையில் நியூயார்க் நகரில் உள்ள காவல்துறையைச் சேர்ந்தவர்களில் 18 விழுக்காடு போலீசார் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது மிகப் பெரிய தொழிற்சங்கமான யுனெட்டட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் அமைப்பின் தலைவரும், ஆப்பிரிக்க, அமெரிக்க செயலாளருமான ரூபன் பர்க்ஸ் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது.