தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சீனா டெலிகாம் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
சீனாவின் அரசுத்துறைத் தொலைத் தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாம், அமெரிக்காவிலும் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சீனா டெலிகாம், சீனா யூனிகாம் ஆகிய நிறுவனங்களால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் இருவர் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்துத் தொலைத்தொடர்பு ஆணையம், பாதுகாப்பு, வெளியுறவு, உள்துறை, நீதித்துறை, வணிகத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர் குழு இது குறித்து ஆராய்ந்தது. இந்தக் குழுவினர் சீனா டெலிகாம் நிறுவனத்தால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தைப் பறிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.
இணையப் பாதுகாப்புக் குறித்தும், அமெரிக்க ஆவணங்கள் எங்குச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் நிறுவனம் அளித்த அறிக்கை துல்லியமாக இல்லை எனவும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.