உலக மக்களின் ஆரோக்கியமே முதன்மையான பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக ஐநா.சபை அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று ஐநா.பொதுச்செயலாளர் அந்தோணியோ கட்டாரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் காணொலி மூலம் விவாதம் நடத்தியது. இக்கூட்டத்தில் பேசிய ஐநா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரஸ் , உலகின் ஆரோக்கியம் முதன்மையான பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக கூறினார்.
ஒவ்வொரு நாடும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் பொருளாதாரப் பின்விளைவுகளில் இருந்து விடுபடத் தவிப்பதாகவும், ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோய்விட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் கூடுதல் நேரம் பணியாற்றி வருவதாகவும், மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் என்று குட்டரஸ் குறிப்பிட்டார்.
இந்த துன்பமான சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்று என்று எச்சரித்துள்ள அவர், அரசுகளின் கவனம் நோய்த்தடுப்பில் இருக்கும் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறிய அவர், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒற்றுமையுடன் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்று குட்டரஸ் வலியுறுத்தினார்.
வேலையின்மை,தொழில்கள் முடக்கம் போன்ற பிரச்சினைகளையும் நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும் என்றும் உலக நாடுகளை அவர் கேட்டுக் கொண்டார்.
கொரோனா விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்ற நாடுகள் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்தன. ஒற்றுமையுடன் இப்பிரச்சினையை எதிர்கொள்ளவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் பல்வேறு நாடுகள் உறுதியளித்துள்ளன.