அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றும் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர்உயிரிழந்தனர். இதனால் நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் நெருங்கியுள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று காரணமாக அமெரிக்காவில் மாபெரும் மனித இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 30 ஆயிரத்து 567 பேர் பாதிக்கப்பட்டதால் மொத்தமாக இதுவரை 4 லட்சத்து 30 ஆயிரத்து 902 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அதேபோல் நேற்று மட்டும் ஆயிரத்து 925 பேர் உயிரிழந்ததையடுத்து இதுவரை 14 ஆயிரத்து 766 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் 22 ஆயிரத்து 356 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்னனர். மேலும் 9 ஆயிரத்து 265 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்காரணமாக நாட்டில் பெரும்பான்மையான மாகாணங்களில் மக்கள் வெளியே நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகாகோவில் மக்கள் கூடுவதைத் தடுக்க மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள சிறைச்சாலையில் 400க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்கன்சாஸ் மாகாணத்தில் 130க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
கலிபோர்னியாவில் என் 95 முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பயன்படுத்திய முகக்கவசங்களில் கிருமிகளைச் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெட்ராய்ட் நகரில் பாதுகாப்புப் பணியில் இருந்த 170 காவல்துறையினருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி 80 விழுக்காடு அறைகள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.