கொரோனா தொற்று காரணமாக கிறிஸ்தவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு வாடிகன் தேவாலயத்தில் வெகு சிலருடன் போப் பிரான்சிஸ் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
கிருமித் தொற்று காரணமாக வாடிகன் நகரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறையொட்டி, வழக்கமாக பேரணியாகச் செல்லும் நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், சிறப்புப் பிரார்த்தனையில் போப் பிரான்சிசுடன் கர்தினால்கள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து புனித வியாழன் தினத்தன்று நடக்கும் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி, புனித வெள்ளி கொண்டாட்டங்கள், வரும் சனிக்கிழமையன்று இயேசு உயிர்த்தெழுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று காரணமாக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களுக்கு போப் ஆசீர்வாதம் வழங்குதல், போப்பின் மோதிரத்தில் முத்தமிடுதல் போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.