ஹஜ் புனித யாத்திரையை ஒத்திவைக்கும்படி இஸ்லாமிய மக்களிடம் சவூதி அரேபியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மெக்கா மதினா உள்ளிட்ட புனிதத் தலங்கள் கொரோனா பீதியின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதலே மூடப்பட்டுள்ளன. மெக்கா மதினா உள்ளிட்ட மூன்று நகரங்களில் தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கானோர் கூடும் மெக்காவின் பெரிய மசூதி வெறிச்சோடி காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் 1500க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதில் 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாடு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்து உள்நாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
மற்ற நாடுகளைப் போல் சவூதியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை முழுவதுமாக ரத்து செய்துள்ளது. இந்த ஆண்டு சவூதியில் மெக்கா மதினாவுக்கு வருகை தர பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் கொரோனா பீதியால் ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.