ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அங்கு 2,337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையை பார்வையிட்ட அதிபர் புதின் தலைமை மருத்துவர் டெனிசிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அப்போது அதிபர் புதின் எந்த வித முகமூடியும் அணியாமல், மருத்துவருடன் கைகளை குலுக்கி சாதாரணமாக நடந்து கொண்டார்.
இந்த நிலையில், புதினிடம் பேசிய மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி, தனிமைபடுத்தப்பட்டுள்ளார். இதற்கடுத்தப்படியாக, அதிபருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், அதிபருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாக அதிபர் மாளிகை கூறியுள்ளது.