அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய்க்கு பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 565 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதேபோல் அமெரிக்காவின் பல பகுதிகளில் இன்று மேலும் 14 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 170ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் பல இடங்களில் புதிதாக இன்று 430 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து அமெரிக்காவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனாவில் இருந்து 5 ஆயிரத்து 500 பேர் குணமடைந்து திரும்பிய நிலையில், ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 ஆயிரத்து 500 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவில் கொரோனா மையமாக திகழும் நியூயார்க் மாகாணத்தில் அதிகபட்சமாக ஆயிரத்து 340 பேர் பலியாகியுள்ளனர். இதுதவிர 61 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
நியூயார்க்கில் தொடர்ந்து கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை கவனத்தில் கொண்டு, அங்குள்ள பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மையத்தின் (Billie Jean King National Tennis Center) ஒரு பகுதி 350 படுக்கைகளுடன் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.
நியூயார்க்குக்கு மாகாணத்துக்கு அடுத்து அதிகபட்சமாக நியூஜெர்சி மாகாணத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூஜெர்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். கலிபோர்னியா, மிச்சிகன் மாகாணங்களிலும் 300 பேர் பலியாகியிருப்பதுடன் சுமார் 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.