கொரோனா தொற்றின் பாதிப்பால் இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாமல் அந்நாடு திணறி வருகிறது.
சீனாவை மையமாகக் கொண்ட கொரோனாவின் கோரத்தாண்டவம் தற்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிச் சுழன்று வருகிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் தொற்று நோயின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் 889 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அங்கு புதிதாக 6 ஆயிரம் பேருக்கு தொற்று பரவியதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 92 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக இத்தாலி 4 புள்ளி 8 பில்லியன் டாலர் செலவிடவிருப்பதால் அந்நாட்டு பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் கொரோனாவின் பாதிப்பு கடுமையாக உணரப்படுகிறது. புதிதாக 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளானதால் அங்கு இதுவரை 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் ஸ்பெயினில் 844 பேர் மரணித்ததால் அங்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அங்கு மேலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மற்றொரு நாடான பிரான்சில் நேற்று மட்டும் 319 பேர் மரணித்ததைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஐத் தாண்டியுள்ளது. மேலும் 4 ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதால் இதுவரை 37 ஆயிரத்து 500க்கும் மேலானோர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 4 ஆயிரத்து 200க்கும் கூடுதலானவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கனடாவில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்துக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
மேலும் அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 விழுக்காடு மக்கள் 40 வயதுக்கு கீழானவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.