உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 400-ஐ தாண்டியுள்ள நிலையில், பாதித்தோரின் எண்ணிக்கையும் 6 லட்சத்தை கடந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் நிமிடத்துக்கு நிமிடம் கொரோனா தொற்று நோயால் ஏற்படும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்தபடியே உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று மேலும் 100 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
அதிகபட்சமாக ஜெர்மனியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 8 பேரும், சீனாவில் 3 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுபோல மேலும் பல நாடுகளில் பலியான 45 பேரையும் சேர்த்தால், உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 400-ஐ தாண்டியுள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு அதிக எண்ணிக்கையில் உயிர்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக இத்தாலி நாட்டில் இதுவரை 9 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கடுத்து அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்திலுள்ள ஸ்பெயினில் 5 ஆயிரத்து 100 பேரும், 3ஆவது இடத்திலுள்ள சீனாவில் 3 ஆயிரத்து 300 பேரும், 4ஆவது இடத்திலுள்ள ஈரானில் 2 ஆயிரத்து 300 பேரும் பலியாகியுள்ளனர்.
இதுதவிர உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று புதிதாக 5 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி 2ஆவது இடத்திலும், சீனா 3ஆவது இடத்திலும், ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவை 4 மற்றும் 5ஆவது இடங்களிலும் உள்ளன. அமெரிக்காவில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேரும், இத்தாலியில் 86 ஆயிரத்து 500 பேரும், சீனாவில் 81 ஆயிரத்து 900 பேரும், ஸ்பெயினில் 65 ஆயிரத்து 700 பேரும், ஜெர்மனியில் 53 ஆயிரத்து 300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் சிகிச்சைக்கு பிறகு, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவர்களில் 23 ஆயிரத்து 500க்கு மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.