பிரிட்டனை சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் (inventor) ஜேம்ஸ் டைசன் (James Dyson) பத்தே நாளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுவகையான வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளார்.
அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர் இல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளும் திண்டாடி வருகின்றன.
இதற்காக உலக வல்லரசான அமெரிக்கா போர்டு (Ford) நிறுவனத்தையும், இந்தியா மாருதி சுசுகி (maruti suzuki) நிறுவனத்தையும் அணுகியுள்ளன. கொரோனா பாதித்த நோயாளிகள் மூச்சு விட திணறும்போது, அவர்களின் சுவாசத்துக்கு வென்டிலேட்டர் அவசியமாகும்.
இருப்பினும் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் வென்டிலேட்டரை தயாரிக்க இயலாது என பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனவரும், டைசன் (Dyson) நிறுவன அதிபருமான ஜேம்ஸ் டைசன், பத்தே நாளில் புதுவகை வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளார்.
புதுவகை வேக்குவம் கிளினர், ஹேன்ட் டிரையர்ஸ், காற்றாடிகள் தயாரிப்புக்கு டைசன் நிறுவனம் புகழ்பெற்றதாகும். தற்போது அந்நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசிடம் இருந்து 10 ஆயிரம் வென்டிலேட்டர் தயாரித்து அளிக்க ஆர்டர் கிடைத்துள்ளது.
மேலும் 5 ஆயிரம் வென்டிலேட்டரை உலக நாடுகளுக்கு தயாரித்து நன்கொடையாக அளிக்க டைசன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.