கடுங்குளிரிலும், கோடையிலும் கொரோனா வைரஸ்கள் இறந்து விடும் என்பது தவறானது என்று தெரிவித்துள்ள WHO , அதிக சூடு உள்ள வென்னீரில் குளித்தால் தோலுக்கு காயம் ஏற்படுமே தவிர வைரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறியுள்ளது.
அதே போன்று கொசுக்களால் கொரோனா வைரஸ் பரவாது, அது சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ் என்பதால் பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல், சளி, உமிழ் நீர், மூக்கில் இருந்து வடியும் நீர் ஆகியவற்றை தொட்டால் மட்டுமே அது பரவும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை கைகளை சோப் அல்லது ஆல்கஹால் கலந்த சானிடைசரால் சுத்தம் செய்வதே சிறந்தது. கைகளை உலர வைக்கப் பயன்படும் ஹேண்ட் டிரையர்களால் கொரோனா வைரசை கொல்ல முடியாது.
உடலின் மீது ஆல்கஹால் அல்லது குளோரினை தெளித்தாலும் பயன் இருக்காது. மாறாக கண், வாய் போன்ற இடங்கள் இவற்றால் பாதிக்கப்படும். ஆனால் இவற்றை தொற்று பாதித்த சுற்றுவட்டாரங்களில் தெளிக்கலாம்.
நிமோனியாவுக்கு அளிக்கப்படும் நீமோகோக்கல், (pneumococcal) ஹீமோபிலியஸ் பி (Haemophilus B) போன்ற தடுப்பூசிகளால் கொரோனாவை தடுக்க முடியாது. அதே போன்று பூண்டுக்கு சில ஆன்டிமைக்ரோபியல் (antimicrobial ) குணங்கள் இருந்தாலும், அது கொரோனாவை அழிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
எல்லா வயது மக்களையும் கொரோனா தாக்கும்.ஆனால் வயதானவர்கள், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவர்களை தாக்கும் வாய்ப்பு அதிகம். கொரோனா தடுப்பில் ஆன்டிபயாட்டிக்குகள் உபயோகமாக இருக்காது, ஏனெனில் அவை பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கும் திறன் வாய்ந்தவை.