கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மக்களை பல பாதிப்புகளுக்கு உண்டாக்கி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. அதிகபட்சமான நாடுகள் அனைத்தும் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே அடங்கி கிடக்கின்றனர்.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா தாக்கத்தின் காரணமாக வீட்டில் தனிமையில் இருக்கும் மக்களை உற்சாகப்படுத்த அந்த நாட்டு போலிசார் பாடல்கள் பாடி, இசை இசைத்து மகிழ்வித்தனர்.
ஸ்பெயினின் மல்லோரியா எனும் தீவில் ரோந்து வாகனத்தில் வந்த போலிசார், இசைக்கருவிகளை கொண்டு, பாடல்கள் பாடிய படி வந்து அந்த மக்களை உற்சாகப்படுத்தி வந்தனர். போலிசார் பாட்டு பாடுவதை கேட்ட வீடுகளில் இருந்த மக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் வந்து கைத்தட்டி போலிசாருடன் இணைந்து பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.
ஊரடங்கு உத்தரவு போட்டதன் காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களை உற்சாகப்படுத்திய போலிசாரின் இந்த செயலை மக்கள் அனைவரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.