கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
அங்கு 26 ஆயிரத்து 863 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 348 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் பாதிப்பேர் நியூயார்க் மாநிலத்தில் ((12,324 - 76))உள்ள நிலையில், அங்கு கொரோனாவை பெரும் பேரிடர் பாதிப்பாக அறிவிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் அம்மாநிலத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய நிதி கிடைக்கும். கலிபோர்னியா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோல அறிவிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், பொருளாதார பாதிப்புகளை சரிசெய்யவும் 2 டிரில்லியன் நிதிஒதுக்கீடு திட்டத்திற்கு, குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியினர் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஆதரவு தர அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, 45 நிமிடங்களில் முடிவுகளை தெரிவிக்கும் விரைவு பரிசோதனை முறைக்கு அமெரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. Cepheid என்ற கலிபோர்னிய நிறுவனத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 1 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் முககவசம், கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக அரசு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இருப்பினும் அவற்றின் விநியோகம் ஓரிரு வாரங்களில் சரியாகும் என தெரிவித்துள்ளனர். அதேசமயம், வென்டிலேட்டர்கள், முககவசங்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு நிர்ப்பந்திக்கும் போர்க்கால சட்டத்தை அமல்படுத்துவதில் அதிபர் டிரம்ப் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.