பிரான்சிலும், சீனாவிலும், கொரோனா சிகிச்சையில், மலேரியா மருந்துகள் ஓரளவு நல்ல பலன் அளித்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் அதன் உற்பத்தியை விரைவு படுத்தி உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், மலேரியா எதிர்ப்பு மருந்துகளான குளோரோகுயின் (Chloroquine), ஹைட்ராக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) ஆகியவற்றை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை. என்றாலும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்குமாறு உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மலேரியா மருந்துகள் கொரோனா கட்டுப்பாட்டுக்கு உதவும் என கருதினால், அவற்றை பரிந்துரைக்கலாம் என அமெரிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்சில் இந்த மருந்துகளைப் பயன்படுத்தி கொரோனா நோயாளிகள் பலர் குணமடைந்துள்ளதாக இதை விற்கும் சனோஃபி (Sanofi) என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குளோராகுயின் போன்ற மருந்துகளை சரியான அளவில் பயன்படுத்த தவறினால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் இதய நோய்கள் ஏற்படும் என முன்னணி பிரெஞ்சு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.