கொரோனா வைரஸ் தொடர்பாக, சீனா நடத்திய ஆய்வின்படி, டைப்-ஏ ரத்தம் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், டைப்-ஓ ரத்த வகை கொண்டவர்கள் கொரோனா வைரஸை எதிர்க்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள் என ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
சீன ஆய்வாளர்கள் வுஹானில் உள்ள 2 மருத்துவமனைகளிலும், ஷென்சென் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் ஆய்வை நடத்தினர். இரத்த வகைகளை வைத்து SARS-CoV-2 பரிசோதனையைப் பயன்படுத்தி 2,173 நோயாளிகளின் இரத்த வகைகளை வைத்து 3,694 க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான மக்களுடன் கொரோனா வைரஸ் நேர்மறை ஆய்வு செய்யப்பட்டு, ஒப்பிடப்பட்டது. ஆய்வின்படி, வுஹான் ஜின்யின்டன் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்ட 1,775 நோயாளிகளில், 37.75 % பேர் டைப்-ஏ ரத்த வகைகளையும், 9.10 % பேர் டைப்-ஓ ரத்த வகையையும் கொண்டுள்ளனர். கொரோனா வைரஸால் டைப்-ஏ ரத்தம் கொண்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,டைப்-ஓ ரத்தம் கொண்டவர்கள் குறைந்த அளவிலே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் வைரஸால் இறந்த 206 பேரில் 41.26% பேர் ஏ ரத்த வகை கொண்டுள்ளதாகவும், 25% சதவீதம் பேர் ஓ ரத்த வகை கொண்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் பீதி அடைய தேவையில்லை எனவும், ஓ ரத்த வகை கொண்டவர்கள் பாதுகாப்பானவர்களாக இருப்பதாக அர்த்தமில்லை என தியான்ஜின் ஆராய்ச்சியாளர் காவ் யிங்டாய் கூறியுள்ளார். அனைவரும் அரசு அதிகாரிகள் கூறியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.