கடந்த மூன்றே நாட்களில் ஆயிரம் பேரை பலிகொண்டு, கொரோனா வைரசின் மையப்பகுதியாக மாறியுள்ள இத்தாலியில், மருத்துவமனைகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.
கொரோனா வைரசின் மிகப்பெரும் பேரழிவாக இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்றே நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்கியதில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே அதிகம் இறப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களையோ அல்லது இறந்தவர்களையோ சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ்கள், சைரன் ஒலி இல்லாமல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து கேட்கப்படும் சைரன் ஒலியால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாக வந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிதமான பாதிப்புக் கொண்டவர்களை வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் படி மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்காக ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்குவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் உதவியாளருக்கும் தேவையான பயிற்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்லும்போது ஏற்பட்ட தொற்றினால் ஏராளமான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.