கொரோனா வைரஸ் பரவலின் மையம் பதினைந்தே நாட்களில் சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்கு மாறியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் இருந்துதான் பரவத் தொடங்கியது. 15 நாட்களுக்கு முன்பு வரை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது, சீனா. ஆனால், கொரோனா வைரஸ் பரவுவது உச்சத்தை தொட்டு, நோய்த் தொற்றுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டதாக கடந்த வாரத்திலேயே சீனா அறிவித்து விட்டது.
கடந்த வாரத்தில் அங்கு கொரானா தொற்றியவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் 85 ஆயிரத்திற்குள் இருந்தது. அதேசமயம், இத்தாலி, அதைத் தொடர்ந்து ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில்தான் கொரானா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களில் உலக நிலைமை ஒட்டுமொத்தமாக மாறியுள்ளதுடன், வைரஸ் பரவலின் மையமாகியுள்ளது ஐரோப்பா.
மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்த கொரானா நோயாளிகளில் 90.5 சதவீதம் பேர், சீனாவில் இருந்தனர். மீதமுள்ள 9.5 சதவீதம் பேர், உலகின் மற்ற நாடுகளில் இருந்தனர். ஆனால் மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி, உலக நாடுகளில் 50.3 சதவீதம் கொரானா நோயாளிகளும், சீனாவில் 49.7 சதவீதம் கொரானா நோயாளிகளும் உள்ளனர்.
கொரானா அலையை எதிர்த்து அதை நீந்திக் கடந்துள்ள சீனாவில், தொற்றில் இருந்து மீண்டவர்கள், உயிரிழந்தவர்கள் போக தற்போது 15 சதவீதம் நோயாளிகள் மட்டுமே உள்ளனர். மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி அங்கு 80 சதவீத நோயாளிகள் இருந்த நிலையில், அது 15 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதோடு ஒப்பிடும்போது, இத்தாலியில் நேற்று மட்டும் 368 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை இந்த சவாலை எதிர்கொள்ள முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கடுத்தபடியாக, ஸ்பெயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மருந்து, உணவு வாங்குவதைத் தவிர வேறு எதற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என 4.7 கோடி மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதற்காகவும் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிரம்பி வழிந்த சீன மருத்துவமனைகள், நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததால் தற்போது காலியாக உள்ளன.