கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து பொருளாதாரத்தை மீட்கும் வகையில், அமெரிக்க மத்திய வங்கி, கடன் வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலைக்கு குறைத்துள்ளது.
அமெரிக்காவில் 3 ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் பொருளாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கியின் அவசரக் கூட்டத்தில், கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பூஜ்யம் முதல் கால் சதவீதம் என்ற வரம்புக்குள் இருக்குமாறு கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க மத்திய வங்கி அவசரமாகக் கூடி, கடன் வட்டி விகிதத்தை குறைப்பது இது இரண்டாவது முறையாகும்.
பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பங்குச்சந்தைகளில் சரிவை தடுத்து நிறுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நல்ல செய்தி என அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஓஹையோ, இல்லினாய்ஸை தொடர்ந்து, நியூயார்க் நகரில் உணவகங்கள், உணவு விடுதிகள், பார்களில் அமர்ந்து உண்பதற்கோ அருந்துவதற்கோ வாடிக்கையாளர்களை அனுமதிகக் கூடாது என மேயர் Bill de Blasio உத்தரவிட்டுள்ளார்.
தேவையான இடங்களுக்கு டெலிவரி செய்வது அல்லது பார்சல் வாங்கிச் செல்வது மட்டுமே அனுமதிக்கப்படுவதாக நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார். இரவு விடுதிகள், திரையரங்குகள், இசையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதேபோல, நியூயார்க்கில் பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
இதேபோல, மளிகைப் பொருள் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுக்கான பொருட்களின் விநியோகம் வலுவாக உள்ளது என்றும், எனவே அத்தகைய பொருட்களை வாங்கி பதுக்க வேண்டாம் என்றும் அமெரிக்கர்களுக்கு அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.