கொரானாவுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலியான நிலையில் உலக அளவில் கொரானா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 508 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 610. கொரானா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்து 776. கொரானாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,518. கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை, சீனாவைவிட அந்நாட்டுக்கு வெளியே அதிகரித்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரானாவினால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள இத்தாலியில், 24 ஆயிரத்து 747 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. இதுவரை 1809 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரேநாளில் 368 பேர் உயிரிழந்துள்ளதால், இத்தாலியர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இத்தாலியின் நிதித் தலைநகர் என்று சொல்லப்படும் மிலன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கொரானாவால் பொது சுகாதார நெருக்கடியையும், பொருளாதார நெருக்கடியையும் ஒருசேர எதிர்கொண்டுள்ள இத்தாலியில், மருத்துவமனைகளின் நிலை திண்டாட்டமாகியுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் புதிதாக நூற்றுக் கணக்காண படுக்கைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், சுவாசக் கருவிகள், தகுதி பெற்ற மருத்துவப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியின் வடபகுதியில் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அங்கிருந்து பாதிப்பு குறைவாக உள்ள தென்பகுதிகளுக்கு பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்திருப்பதும் இத்தாலி அரசை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
கொரானா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 2வது ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய வீதிகளில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்நாட்டில் கொரானா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 152ல் இருந்து 288 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன்பொருட்டு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி போயினர். இதனால் முக்கிய நகரங்கள் அனைத்தும் வெறிசோடின.
பாகிஸ்தானில் ஒரே நாளில் புதிதாக 41 பேருக்கு கொரானா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 76 பேருக்கு கொரானா தொற்று உள்ளது. இதில், கராச்சி நகரில் மட்டும் 25 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது. இதுதவிர பலூசிஸ்தானில் 10 பேருக்கும், கில்ஜிட் பல்ட்டிஸ்தானில் (Gilgit Baltistan) 3 பேருக்கும் இஸ்லாமாபாத்தில் 4 பேருக்கும் பஞ்சாப்பில் ஒருவருக்கும் கொரானா பாதித்துள்ளது.