ஆட்கொல்லி நோயான கொரானாவுக்கு சீனாவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ள சீன சுகாதாரத்துறை, புதிதாக 20 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரானா அச்சம் நிலவுவதால், சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது தாயகம் திரும்பும் சீனர்களும், கட்டாயமாக14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்படுவதை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசு, இதனை, திங்கட்கிழமை முதல் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
சீனாவில் மட்டும் 80 ஆயிரத்து 778 பேருக்கு கொரானா அறிகுறி இருப்பது கண்டறியப் பட்டது. இவர்களில், 10 ஆயிரத்து 734 பேர் சிறப்பு மருத்துவ பிரிவில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 66 ஆயிரத்து 911 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும் சீன சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.