நம்முடைய சுற்றுசூழல் காலத்திற்கு தகுந்தார்போல அவ்வப்போது மாறிக்கொண்டே வருகின்றது. இயற்கையால் தான் அந்த மாற்றங்கள் நடப்பதாக நாம் கூறிக்கொண்டாலும் மனிதர்களாகிய நாம் தான் அதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறோம்.
சுற்றுசூழல் ஆர்வலர்களும் பருவநிலை மாற்றத்திற்கு மனிதனின் செயல்பாடுகளும் மனிதனின் கண்டுபிடிப்புகள் தான் முக்கிய காரணம் என கூறுகிறார்கள்.
மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதற்காக உருவாக்கப்பட்டு இருந்தாலும் காலப்போக்கில் அவை நமக்கு ஆபத்தானவையாக மாறி வருகின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை. அதுமட்டுமல்லாது இந்த பருவநிலை மாற்றமும் புவி வெப்பமடைதலும் இதேபோல தொடருமேயானால் அவை மிகப்பெரும் அழிவை நோக்கி பூமியை இட்டுச்செல்லும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
பூமியின் சராசரி வெப்பநிலை 14 லிருந்து 16 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காலநிலைக்கு ஏற்ப அது அதிகமாகவும், குறைவாகவும் இயற்கையாகவே மாறும். ஆனால் சமீப காலங்களில் புவி வெப்பமடைவது எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாகி வருகிறது. இப்போது பூமியில் நடக்கும் இயற்கை அழிவுகள் அனைத்தும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே நடக்கின்றன.
பொதுவாக இயற்கையான மற்றும் செயற்கையான காரணங்கள் மூலம் புவி வெப்பமடைதல் நடக்கிறது. வளிமண்டலத்திலிருந்து இயற்கையாகவே வெளிவரும் குளோரோஃப்ளோரோ கார்பன், நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமை வாயுக்கள் மூலம் புவி வெப்பமடைதல் ஏற்படுகின்றது.
அதைவிட அதிகமாக மனிதால் உருவாக்கப்பட்ட மின் நிலையங்கள், கார்கள், விமானங்கள், கட்டிடங்கள், மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட இதர கட்டமைப்புகள் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதுமட்டுமல்லாது, நைலான், பாலித்தீன் போன்ற ரசாயன பொருட்களை எரிப்பதன் மூலமும், காற்றும் மாசுபடுகிறது.
மேலும் காடுகளை அழிப்பதும், நிலங்களை தவறாக பயன்படுத்துவதும் இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியாகும் அளவு குறைந்து கார்படன் டை ஆக்சைடு பெரும் அளவில் உற்பத்தியாகி புவி வெப்பமாவதை அதிகரிக்கிறது. உலகின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால். மக்கள் வாழ்வதற்கு தேவையான இருப்பிடத்தை உருவாக்க காடுகளை அழித்து வாழிடங்களை உருவாக்கி வருகிறோம்.
இதனால் இயற்கை வளங்களும், விலங்குகளும் அழிகின்றன இப்படி தொடச்சியாக இயற்கையை அழிக்கும் அல்லது இயற்கைக்கு எதிரான செயல்களில் நாம் ஈடுபடுபவதால் மரங்களும் காடுகளும் அழிந்து. பூமியில் விழும் ஒளிக்கதிர்கள் வெளியேறாமல் அப்படியே இங்கேயே தங்கிவிடுகின்றன. இதனால் பூமி வெப்பமடைந்து பாதிப்புகள் ஏற்படுகின்றன.
புவி வெப்பமடைதலை நாம் சாதாரணமாக நினைத்தாலும் இன்று நடந்துகொண்டு இருக்ககூடிய இயற்கை பேரழிவுகள் அனைத்தும் புவி வெப்பமடைதலின் சாராம்சத்திலேயே நடக்கின்றது என்பது தான் உண்மை
தாவரங்களில் இருக்கும் பல்வேறு இனங்கள் அழிந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பூக்கள் பூக்கும் காலங்களும் மாறி வருகின்றன.
இயற்கை வளங்கள் குறைந்தே கொண்டே வருவதால் காடுகளில் வாழும் பல சிறிய உயிரினங்கள் மக்களை நோக்கி வருவதாலும் அவற்றிற்கு இருக்கும் நோய்கள் வேகமாக மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளது.
மேலும் அண்டார்டிகா போன்ற பனி நிறைந்த பிரதேசங்களில் இருக்கும் பனிமலைகள் வேகமாக உருகுவதால் கடலின் நீர் மட்டம் உயர்ந்து கடலோர நாடுகளின் எல்லைகள் மாறுகின்றன மேலும் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ ஏற்பட்டு காடுகள் அழிகின்றன.
அதுமட்டுமல்லாது பருவநிலைக்கு மாறாக மழை பெய்தல், தீவிரமான சூறாவளிகள் என பல்வேறு சுற்றுசூழல் மாற்றங்கள் ஏற்பட்டு மக்கள் அதிக பாதிப்புகளை தொடர்ந்து சந்தித்து கொண்டே இருக்கிறோம்.
எனவே இது போன்ற பாதிப்புகளை தடுக்க இயற்கையை எந்தவித தொந்தரவும் செய்யாமல் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை வாழ்ந்து மனித இனத்தை காப்பாற்றி நம் அடுத்த தலைமுறையை காப்பாற்றுவோம்.