கொரோனா வைரசின் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை 500 ஐ நெருங்கியுள்ள நிலையில், உலக நாடுகளின் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளில் தனது நச்சுக்கரங்களைப் பரப்பியுள்ளது. உலகம் முழுவதும் இந்த நோயின் தாக்கத்திற்கு இதுவரை 3 ஆயிரத்து 466 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 ஆயிரத்து 401 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் மட்டும் கொரோனாவால் 3 ஆயிரத்து 42 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் 197 பேரும், ஈரானில் 124 பேரின் உயிரையும் பறித்துள்ளது கொலைகாரக் கொரோனா. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கொடூரக் கரங்களில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் 15 பேரைக் காவு வாங்கிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. கலிபோர்னியாவில் புதிதாக 4 பேருக்கும், அர்ஜென்டினாவில் 6 பேருக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 15 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 20 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது.
இதேபோல் ஆக்லஹாமிலும், கோஸ்டாரிகா, கொலம்பியா, பெரு ஆகிய பகுதிகளில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் நெதர்லாந்து நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா பரவத் தொடங்கிய சீனாவில் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 80 ஆயிரத்து 576 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் சீனாவில் மட்டும் சிகிச்சை முடிந்து குணமாகி வீட்டுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 126 ஆகும். இது 94 விழுக்காடாகவும், உயிரிழப்பு 6 விழுக்காடாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், அதில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சி காண்போரை பதற்றத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
உண்மையான இறப்பை ஈரான் மறைப்பதாகவும், உறவினர்கள் யாரும் வாங்கிச் செல்லாததால் இறந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்றுக் கிடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே கொரோனா பாதிப்பு குறித்து அறிய ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் ஹலோ என்று கூறிய அடுத்த நொடி கைகளை குலுக்குவதற்குப் பதிலாக தங்கள் முழங்கையை ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்வதை வழமையாக்கிக் கொண்டுள்ளனர்.